Wednesday, February 14, 2007

கடற்கரை மணலில் M.G.R படம்

(இது ஒரு மீள்பதிவு )

முக்கடலும் முத்தமிடும் குமரி-க்கு மேற்கே அரபிக்கடல் தாலாட்டும் (அவ்வப்போது சீரழிக்கும்) அமைப்பான மீனவ கிராமம் ,நம்ம சொந்த ஊர் .கிட்டதட்ட 25 வருடங்கள் பின்னோக்கினாலும் அப்பொதே,மற்ற மீனவ கிராமங்களிலிருந்து சற்று வித்தியாசம் என்று தான் சொல்ல வேண்டும்.ஊருக்கு மேற்கே பழமையான மிகப்பெரிய தேவாலயம் .அதையொட்டி ஊருக்கு சொந்தமான (நான் உயர்நிலை வரை படித்த,அம்மா எனக்கும் படிப்பித்த) உயர்நிலைப்பள்ளி (இப்போது மேல்நிலை) .அற்புதமான பெரிய தேர் .எனக்கு தெரிந்து இத்தனை பெரிய தேரை எந்த தேவாலயத்திலும் பார்த்ததில்லை .எந்த மீனவ கிராமத்திலும் இல்லாத வகையில் தேவாலயத்தில் முன்னால் 200 அடி அகலம்,800 மீட்டர் நீளமான தேரடி வீதி போன்ற கடற்கரை மணலாலான தெரு.கசமுசா என்றில்லாமல் தெருக்களாக கட்டப்பட்ட வீடுகள் .அதிக ஆடம்பரமும் ,அதிக ஏழ்மையும் இல்லாத வீடுகளின் தோற்றம்..கிராமத்துகுரிய ஓலை குடிசைகள் கிட்டதட்ட இல்லை என்றே சொல்ல வேண்டும் .

ஊரின் இரு புறங்களிலும் சுத்தமான உயரமான மணல் தேரிகள் நிரம்பிய கடற்கரை,தென்னந்தோப்புகள்.மக்களின் பரம்பரை தொழில் மீன்பிடி .அப்போது சுமார் 3000 பேர் .ஒரே சாதி .ஒரே மதம்.சுத்தி வளைத்து பார்த்தால் எல்லொரும் எல்லொருக்கும் ஒரு வகையில் சொந்தக்காரர்கள்.விசைபடகுகள் இன்றி சாதாரண கட்டுமரத்தில் தொழில் செய்வதால் ,துடுப்பு போடும் வலிமையான தோள்கள் கொண்ட ஆண்கள் .கஷ்டத்திலும் பிள்ளைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வுள்ள கூட்டம்.ஊரைப்பத்தி சொல்லிட்டே இருக்கலாம்..சரி ..matter-க்கு வருவோம்..

அப்போ நான் ஊர்பள்ளியிலே படிச்சிட்டு இருந்த போது TV கிடையாது..தமிழ் நாட்டு தலையெழுத்துக்கு எங்க ஊர் மட்டும் விதி விலக்கா? நம்ம மக்களுக்கு சினிமா-ன்னா அப்படி ஒரு ஆர்வம் ..அதிலும் வாத்தியார் படம்னா கேக்கவே வேணாம்.கிட்டதட்ட ஒட்டுமொத்த ஊரும் வாத்தியார் பக்தர்களாவே (உபயம் : படகோட்டி ,மீனவ நண்பன்)இருந்தது (என்ன மாதிரி ஒரு சில சிவாஜி பைத்தியங்களை தவிர) ..எதாவது ஒரு காரணத்த சொல்லி வாரத்துக்கு ஒரு படமாவது ஊருல போடுவாங்க ..பெரும்பாலும் வாத்தியார் படம்..அப்பப்ப சிவாஜி படம்.35 MM திரையில கடற்கரை மணல்ல ஒட்டுமொத்த ஊரும் ஒண்ணா உக்காந்து படம் பாக்குற அனுபவம் இருக்கே !அடடடா!கல்யாணம் ,மறுவீடுல இருந்து புது கட்டுமரம் ,வலை release வரைக்கும் எதாவது ஒரு வைபவதுக்கு சம்பந்தபட்டவர் படமாவது போடலிண்ணா என்னங்க மரியாத1 நாகர்கோவில்-ல ஸ்டுடியோ-க்கு போய் advance கொடுத்துட்டு வந்தவுடனே பள்ளிக்கூடத்துல தான் இது முதல்ல எதிரொலிக்கும் .."மக்களே ! அருளப்பன் மொவளுக்கு கல்யாணத்துக்கு வெள்ளிக்கிழம படம்" " என்ன படமாம்?" " ஆயிரத்தில் ஒருவன்' (ஏற்கனவே 6 தடவ போட்டாச்சே? சொல்ல முடியுமா? அடி தான் விழும்) "நல்லா தெரியுமா?" "போப்பா! அருளப்பன் நேத்து தான் அட்வான்ஸ் குடுத்துண்டு வந்தாராம்"..அடடா! இன்னும் 2 நாள் இருக்கே?..நம்ம நண்பர் குழு (கிட்ட தட்ட 10 பேர்) அப்பவே ரெடியாயிருவோம்.

வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்தில் பசங்க மொகத்துல அத்தனை மகிழ்ச்சி ! வரலாறு வாத்தியார் கண்டுபிடிச்சிருவாரு.."என்னடே! இன்னிக்கு ஊருல படமா?".."ஆமா சார் ..ஆயிரத்தில் ஒருவன்" ..வாத்தியார் MGR பத்தி அவர் பங்குக்கு வஞ்ச புகழ்ச்சி -யில கொஞ்ச நேரம் பசங்கள கிண்டலடிப்பார் (கிட்டதட்ட ஊரே MGR ரசிகரா இருக்கும் போது ஊரிலுள்ள வாத்தியார் பெரும்பாலும் MGR-ய் கிண்டல் பண்ணுவது தான் பசங்களுக்கு புரியல்ல.".இந்த வாத்தியாருங்கள்ளாம் கருணாநிதி கோஷ்டிங்க") .நமக்கு அதே அளவு உற்சாகம் இருந்தாலும் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம் .அதே பள்ளியில வேலை பாக்குற டீச்சர் புள்ள..அம்மாக்கு சினிமாவே ஆகாது..அதிலும் MGR -ன்னா சுத்தமா ஆகாது).

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து ,விளையாடப்போகிறேன் என்று சொல்லி விட்டு நம்ம கோஷ்டியோடு கலந்துக்குவேன்..மெதுவா சினிமா போடப்போற வீட்டுக்கு பக்கதுல போய் நோட்டம் போடுறது ..இன்னிக்கு படம் உண்டுன்னு confirm பண்ணிட்டு ,நேரே கடற்கரை ..குட்டி மலைகளை போல உயரமான சுத்தமான மணல் குன்றுகள் ..அருகருகே கத்தாளை வளர்ந்து குகைகள் போல தோற்றம் .கோஷ்டியை ரெண்டா பிரிச்சு (MGR கோஷ்டி ,நம்பியார் கோஷ்டி) ,ஆளுக்கொரு கம்பை எடுத்துக்கொண்டு மணல் மேட்டு உச்சியில் நின்று வாள் சண்டை ..அவ்வப்போது கத்தாளை குகைகளிலிருந்து எதிர்பாரா தாக்குதல்..மலையிலிருந்து உருள்வது போல ,பட்டு போன்ற அந்த மணல் சரிவில் உருளுதல் என்று நிஜ வாள்சண்டை ரேஞ்சுக்கு தொடரும் விளையாட்டு .இருட்டியதும் உடலிலிலும் தலையிலும் கடற்கரை வெள்ளை மண்ணோடு வீடு .குளித்து விட்டு மீண்டும் ஒண்ணா சேர்ந்து படம் போடப்போகிற பெரிய திறந்த மணல் வெளியை ஒட்டிய ரோட்டில் படப்பொட்டி கொண்டு வரும் டாக்சி-க்காக waiting..

கொஞ்க நேரத்தில் ..அதோ வருகிறது டாக்சி ..பெரிய திரையை துணிகடையில் துணியை சுருட்டிவைத்தது போல கம்பு போலாக்கி டாக்சி-யின் மேல் கட்டியிருந்தால் confirmed..அவ்வளவு தான் ..பசங்க ஆளாளுக்கு பறந்து விடுவார்கள் ..பின்ன! பொட்டி வந்தாச்சுன்னு அவங்கவங்க தெருவுல சொல்ல வேணாமா? சட்டு புட்டுன்னு சாப்பிட்டு வேலைய முடிச்சிட்டு எல்லோரும் வரணுமுல்ல!..அதுலயும் தாய்மார்கள் வாத்தியார் படம்ணா சாப்புடாட்டியும் பரவாயிலிண்ணு மொத ஆளா வந்துடுவாங்க.பாய்மரத்துக்கு உபயோகிக்குற ரெண்டு உயரமான மூங்கில கொண்டு வந்து நட்டு ,அதுல திரைய கட்டியாச்சு..Projector-அ தூக்கிட்டு வந்து 20 மீட்டர் தள்ளி போகஸ்-லாம் பாக்குறாங்க .தியேட்டர்ல போடுர மாதிரியே எதாவது ஒரு நியூஸ் ரீலை முதல்ல போடணும் ..அப்போ தான் கொஞ்ச நஞ்சம் மீதியிருக்குற சனங்களும் "ஏ! நியூஸ் போட்டாச்சி" -ன்னு அரக்க பரக்க ஓடி வருவாங்க..

நமக்கு இன்னும் தான் பிரச்சனையே! மத்த பசங்கள்ளாம் நினைச்ச நேரத்துக்கு வரலாம் .நம்ம அப்பிடியா ? டீச்சர் புள்ளையாச்சே! மெதுவா வீட்டுகுள்ள போவேன் ..அம்மா முன்னால நான் போய் நிக்குற அழகும் ,ரோட்டுல மக்கள் பரபரப்பா போற சத்தமும் ..அம்மாக்கு தெரியாதா நான் எதுக்கு வழியுறேன்னு .." என்ன! இன்னிக்கு படமா?" "ஆமா" "யார் படம்?" "MGR படம்" "ம்..ரொம்ப முக்கியம்...சரி..சரி..ஜெபம் படிச்சுட்டு சாப்பிட்டு போ"..வேற வழி..?குடும்பமே ஜெபத்துல உக்காரும் ..நம்ம மனசோ எங்கியோ இருக்கும் ..இப்போ கிட்ட தட்ட எல்லோரும் போயிருப்பாங்க..பரந்த அந்த மணல் வெளியில் அவங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு இடத்த புடிச்சுகிட்டு ,சிலர் உக்கார ,சிலர் படுத்துகிட்டே பாக்குறதுக்கு வசதியா மணலை ஒருக்களித்து தலையணை போலாக்கி துண்டோ போர்வையோ விரித்து தயாராயிருப்பார்கள் .நான் போய் நம்ம பசங்க ஒண்ணா உக்காந்திருக்கிற இடத்த கண்டுபிடிச்சு கூட்டத்துல நுழைஞ்சு போய் சேந்துக்கணும் ..எனக்காகவே பசங்க எப்பொதும் projector-kku தெக்க 5 மீட்டர் தூரத்துல இருப்பாங்க..இங்க இன்னும் ஜெபமே முடியல்ல ..ஜெபத்துல நான் சொல்ல வேண்டிய turn வரும் "அருள் நிறைந்த மரியே வாழ்க..கர்த்தர் உம்முடனே....." படுவேகமா சொல்லுவேன்..10 தடவ திருப்பி சொல்லணும் ..ஒரு வழியா ஜெபம் முடிஞ்சதும் ..சாப்பாடு ..சாப்பிட ஆரம்பிசதும் ..அங்க நியூஸ் ரீல் ஓடுர சத்தம் கேக்கும் ..நான் அள்ளி திணிச்சுட்டு ..குளிருக்கு ஒரு துண்டை எடுத்து போட்டுகிட்டு "ம்மா..வர்ரேன்"-ன்னு பதிலுக்கு காத்திருக்காம ஓடுனா படம் போடுர எடத்துல போய் தான் நிப்பேன்..நம்மளை எதிர் பார்த்திருக்கிற பசங்க நம்மள கண்டதும் 'மக்களே!" குரல்குடுப்பாங்க. ..எனக்கு பசங்க மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் ..இருட்டுல நான் பாட்டுக்கு கூட்டத்துகுள்ள போயிட்டிருப்பேன் .குறஞ்சது 10 பேர் காலையோ மிதிச்சுகிட்டு (அவங்களும் கண்டுக்குறதில்ல..)மண்ணு தெரியிர இடத்துல கால வச்சு தாண்டி தாண்டி பசங்க இருக்க இடத்துல கிட்ட தட்ட குதிச்சு தான் கரையேறுவேன்..

படம் தொடங்குறதுக்கு சரியா இருக்கும்..சுத்தி ஒரு நோட்டம் விட்டா..ஒட்டு மொத்த ஊரும் இங்க தான் இருக்கு.இனிமே தான் பசங்க எங்க வேலைய ஆரம்பிபோம் ..10 பேர் கும்பலா இருப்போம் .நமக்கு லீடர் ஆரோக்கியம் .அவன் சொன்னாத்தான் ஒண்ணா செய்யுறது .இப்போ எழுத்து போட்டாச்சு ..கம்பெனி பேரெல்லாம் போட்டு ..போட்டான் பாரு "புரட்சி நடிகர் M.G.R" ..அவ்வளவு தான் ..கை தட்டல் ,விசில் ..கடல்ல போற கப்பல் காரனுக்கே கேக்குற மாதிரி ..கொஞ்ச பேரு துண்டை எடுத்து வானத்துல வீசுறாங்க ..அது அவன் கிட்ட திருப்பி வர்ரதுக்கு பதில் வேற யார் தலை மேலே விழ அவன் சுருட்டி வச்சுகுறான் (படம் முடிஞ்சு தான் துண்டு பரிமாற்றம் நடக்கும்) ..

இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்க ,நம்ம பசங்க இருக்க இடம் இடிவிழுந்த மாதிரி இருக்கும் .கை தட்டல் ,விசில் ஏன் அசைவே கிடயாது..அப்பமே சுத்தி இருக்கவனுங்க விவகாரமா பாப்பாங்க ..ஒட்டு மொத்த கூட்டமும் வாத்தியார் பேருக்கு கை தட்டும் போது இவனுங்க கல்லுளி மங்கன் மாதிரி இருக்கானுவளே? அப்படின்னு பாப்பாங்க..திரையில வேற எழுத்தெல்லாம் ஓடிட்டிருக்கும் ..ஆரோக்கியம் சொல்லுரதுக்கு நாங்க வெயிட்டிங் ..திடீர்ன்னு "எடிட்டிங் --ஏகாம்பரம்" -னு ஸ்கிரீன்ல வரவும் ஆரோக்கியம் "அட்ரா மக்களே!" ..10 பேரும் கைதட்டல் ,விசில்னு கலக்கி எடுத்துடுவோம் ..ஒட்டு மொத்த கூட்டமும் திரும்பி பாக்கும் ..அங்கங்கே முணுமுணுப்பு கேக்கும் "ஆரம்பிச்சுட்டாங்க.."..பக்கத்துல ஒரு பெருசு "நானும் பல தடவ பாத்துடுட்டேன் ..இப்டியே பண்ணிட்டிருக்காங்க ..யாருக்க மொவனுவள்ள அது"..அங்கங்கே அறுப்பு கண்டமும் கேக்கும் (கெட்ட வார்த்தய நம்ம ஊருல 'அறுப்பு கண்டம்'-ன்னு தான் சொல்லுவாங்க..வரலாறு & புவியியல் பரிட்சையில "கண்டங்களிலே பெரிய கண்டம் எது?' கேள்விக்கு நம்ம நண்பன் எழுதுன விடையும் "அறுப்பு கண்டம்' தான்)

படம் இப்போ பிக்கப் ஆயி மக்கள் ஒன்றி போயிருப்பாங்க.இப்போ வாத்தியாரும் நம்பியாரும் வாள்சண்டை..வாள் சண்டை முடிஞ்சவுடனே..ஆஹா! இப்போ வர்வானுங்கன்னு நினைக்குறதுக்குள்ளால ..ஒருத்தர் எழும்பி ப்ரொஜக்டர் ஆப்பரேட்டர் கிட்ட வந்து "அண்ணாச்சி ..அந்த வாளடி(வாள் சண்டை)-ய சுத்திப் போடும் "..அதானே பாத்தேன் ..வாத்தியார் படத்துல வாளடி,கம்படி ரெண்டும் ஒரு தடவையாவது திருப்பி போடணும்-றது நம்ம ஊருல எழுதப்படாத விதி..நம்ம ஊருக்கு வர்ற ஆப்பரேட்டர் கிட்ட ஏற்கனவே ஸ்டுடியோ-ல சொல்லி விட்டுருப்பாங்க ..மரியாதயா போட்டுடு,இல்லைன்னா ப்ரொஜக்டர் கடல்ல தான் போகும்.திரும்பி வராதுண்ணு .அதனால சொன்னவுடன அவரும் சுத்தி போட்டுடுவாரு.

இன்னொரு ஆசாமி..50 வயசு இருக்கும்..வாத்தியாருன்னா அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்படுவார்.ஒரு குகைக்குள்ள வாத்தியாரும் நம்பியாரும் ஒருத்தரை ஒருத்தர் தேடிட்டிருப்பாங்க..திடீர்னு நம்பியார் கைல கத்தி வச்சுகிட்டு வாத்தியார் பின்னாலயிருந்து வந்துகிட்டிருப்பார் .இவருக்கு இருப்பு கொள்ளாது ..கிட்ட தட்ட எழும்பி,சத்தம் போட்டு "வாத்தியாரே! திரும்பி பாருங்க..அன்னா பின்னால வர்றான்.."-னு பொலம்புவார்..ஏற்கனவே இதே படம் 6 தடவ போட்ட போதும் இதேதான் பண்ணாரு.நாங்க பசங்க இவரு உக்காந்திருக்க இடத்த தேடி நைஸா நகர்ந்து அவர சுத்தி உக்காந்துகுவோம்..நாங்க இருக்கத கூட கவனிக்க மாட்டரு .எதாவது ஒரு சீன் -ல வாத்தியார் அம்மா கிட்ட செண்டிமெண்டா எதாவது வசனம் சொல்ல இவர் இங்கிருந்து 'ச்சு ..ச்சு..ச்சு" -ன்னு நாய கூப்பிடுரமாதிரி பண்ணுவார் ..கொஞ்ச நேரத்துல சம்பந்தம் இல்லாத ஒரு சீன் -ல நாங்க பசங்க எல்லொரும் சொல்லி வச்சு ஒரே நேரத்துல 'ச்சு..ச்சு..ச்சு" -ன்னு கொட்ட ஆரம்பிச்சுடுவோம்..அப்போதான் அவர் தன்னிலைக்கே வருவாரு..சுத்தி முத்தி எங்களையெல்லாம் பாப்பாரு ..மண்ணை எடுத்து வாரி எங்க மேல வீசி திட்டுவார்..நாங்க எழும்பி பறந்தே போயிடுவோம்.

இப்படியே நாங்க நோட் பண்ணி வச்சுருக்குற ஆட்களோட வம்பு பண்ணி திட்டு வாங்கி ஒரு ரவுண்டு வந்தா படம் முடிஞ்சுடும் .படம் முடிஞ்சா பாதி கூட்டம் தான் எந்திரிக்கும் .கொஞ்ச பேர் ஏற்கனவே உக்காந்த இடத்துலயே படுத்து தூங்கிருப்பாங்க..கொஞ்ச பேர் படம் முடிஞ்சு அங்கியே படுத்துடுவாங்க ..ஜிலு ஜிலு-ன்னு கடற்கரை காத்துல மணல்ல தூங்க யாருக்கு தான் பிடிக்காது..ஆனா அம்மா டின்னு கட்டிடுவாங்க .அதுனால பேசாம வீட்டுக்கு நடைய கட்டு..


ஒரு நாள் படம் பாதி ஓடிட்டிருக்கும் போது கரண்ட் கட்..மக்கள் உக்காந்த இடத்துலயே பேசிட்டு கரண்டுக்காக வேயீட்டிங்..ரொம்ப நேரமாயும் கரண்ட் வரல்ல ..பின்னாலயிருந்து ஒருத்தர் ப்ரொஜக்டர் ஆப்பரேட்டருக்கு கேக்குறமாதிரி சத்தம் போட்டு சீரியஸா சொன்னார் "ஓய்! கரண்டு வர்ர வரைக்கும் அந்த நியூஸை போடக்கூடாதா..?".

7 comments:

ஜோ/Joe said...

Test

இலவசக்கொத்தனார் said...

ஜோ, இது முன்னமே படிச்சதாச்சே. மீள் பதிவா?

Anonymous said...

உங்க ஊருக்கு வந்து வாத்தியார் படம் பார்த்த மாதிரி இருந்தது..

எடிட்டிங் ஏகாம்பரத்துக்கு கை தட்டுவதில் இருந்து, அடுத்தவன் துண்டை சுருட்டி வைக்பது வரை ரசித்தென்.

பிறகு ஆறுமுறையும் வாத்தியாரை எச்சரிக்கை செய்த ஆள்..."கொல்" சிரிப்பு..

கடைசி மேட்டரான கரண்டு கட்டு, சூப்பர்..

ஜோ/Joe said...

இலவச கொத்தனார்,
ஆம்.இது ஒரு மீள்பதிவு .இப்போது மூலத்தின் சுட்டி கொடுத்திருக்கிறேன்.

செந்தழல் ரவி,
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

ஜோ/Joe said...

Test

Anonymous said...

Arumaiyaaka irunthathu! ethey pooRntha ennudaiya anupavangkalum manathil rewind aanathu ;)

pils said...

Hi Joe,

Excuse me, for leaving a comment in English. I do not have that tamil font.

I enjoyed reading that lovely stuff about ' MGR Padam'. It took me back to my younger days, in the village, having a similar experience.

Keep up the good work!!!

Pillai